ஓவர் நைட்டில் பல சாதனைகளை படைத்த கே.எல்.ராகுல் - குயின்டன் டிகாக் ஜோடி...!
கொல்கத்தா அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி வீரர்களான கே.எல்.ராகுல் - குயின்டன் டிகாக் ஜோடி பல சாதனைகளைப் படைத்துள்ளது.
நவிமும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் - குயின்டன் டிகாக் ஜோடி கொல்கத்தா பந்து வீச்சை விளாசி தள்ளியது.
குயின்டன் டிகாக் 70 பந்துகளில் 140 ரன்களும், கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 68 ரன்களும் அடித்தனர். இதன்மூலம் இந்த ஜோடி பல சாதனைகளை படைத்துள்ளது.
அதன்படி இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப்க்கு அதிக ரன்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் கே.எல்.ராகுல் - குயின்டன் டிகாக் 210 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் அணியில் விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் வார்னர் கூட்டணி 185 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
இதேபோல் கொல்கத்தா அணிக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு அமைந்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்துள்ளது. இதற்கு முன் 2012 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியைச் சேர்ந்த ரோகித் ஷர்மா மற்றும் ஹெர்ஷல் கிப்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 167 ரன்கள் எடுத்து இருந்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது.
ஐபிஎல் தொடரின் ஒரு இன்னிங்ஸில் 20 ஓவர்களும் விளையாடிய முதல் ஜோடியும் இதுதான். ஆட்டமிழக்காமல் 140 ரன்களுடன் இருந்த குயின்டன் டிகாக் ஐபிஎல் தொடரில் அதிகபட்ச ரன்கள் விளாசிய 3வது வீரராக உள்ளார்.