கொரோனா உயர வாய்ப்பு இருக்கு...மக்களே மாஸ்க் போடுங்க ப்ளீஸ் : சுகாதாரத்துறை செயலாளர் அட்வைஸ்

COVID-19 COVID-19 Vaccine Face Mask
By Petchi Avudaiappan Apr 21, 2022 10:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை கடுமையாக பாதித்து வந்த கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2 ஆம் அலைகளை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா 3 ஆம் அலை ஏற்பட்டது. ஓமிக்ரான் கொரோனா காரணமாக அப்போது நாட்டில் வைரஸ் பாதிப்பு அதிகமானது. ஆனால் இந்த அலை விரைவில் முடிவுக்கு வந்ததால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். 

இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மெல்ல மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து பல மாநிலங்களிலும் மாஸ்க் கட்டாயம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக சென்னை ஐஐடியில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ஐஐடியில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாஸ்க் கட்டாயம் இல்லை என்று தமிழக அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை. ஆனால் மாஸ்க் கட்டாயம் இல்லை என்று அறிவித்ததைப் போல ஒரு தவறான புரிதல் இங்கு உள்ளது.

அறிகுறி இருக்கும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்யும்படி அறிவுறுத்தியுள்ளோம். முதல்வரும் கொரோனா பரிசோதனையைக் குறைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது போல தெரிகிறது. எனவே அனைவரும் மாஸ்க் போட்டு கைகளை நன்கு கழுவி தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.