செவ்வாய் கிரகத்தில் நீர் ஆதாரம் இருந்ததற்கான தடயம் கண்டுபிடிப்பு- நாசா அறிவிப்பு
மர்ம கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில் இருந்து சேகரிக்கப்பட்ட பாறைத்துகள்கள் மூலம் அங்கு உயிர்கள் வாழ்ந்திருக்கலாம் என்ற யூகம் வலுவடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு கடந்த ஆண்டு பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்தை அனுப்பியது.
கடந்த பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தின் என்ற இடத்தில் தரையிறங்கியது. அப்பகுதியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.
பெர்சவரன்ஸ் கருவி செவ்வாயின் புகைப்படங்களை தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பாறைத்துகள்களை சேகரிக்கும் பணியில் ரோவர் ஈடுபட்டது.
ஆனால் முதல் முயற்சியே தோல்வியில் முடிவடைந்ததால் நாசா விஞ்ஞானிகள் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் தொடர் முயற்சியின் பயனாக 6 சக்கரங்களை கொண்ட பெர்சவரன்ஸ் ரோவர் கருவி பாறைகளை குடைந்து மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்துள்ளது.
விரல் அளவுக்கு தடிமனான பாறை துகள்களை டைட்டானியம் குழாய்க்கு ரோவர் சேமித்து வைத்துள்ளது. சேகரிக்கப்பட்ட மாதிரிக்கு நாசா பெயரிட்டு ஆய்வுகளை தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக நாசா வெளியிட்டுள்ள படங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. செவ்வாயில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நாசாவின் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
பாறை மாதிகள் மூலம் கிடைத்துள்ள முதல்கட்ட தகவலில் செவ்வாயில் எரிமலை செயல்பாடுகள் நீர் ஆதாரம் இருந்ததற்கான தடையங்கள் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2 மாதிரிகள் கிடைத்துள்ள நிலையில் பெர்சவரன்ஸ் கருவி அங்கிருந்து 650 அடி தூரம் நகர்ந்து பாறை மாதிரிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.