மகளிடம் பேசிய திருமணமான இளைஞர் கொலை - பக்கத்து வீட்டு குடும்பத்தினரின் வெறிச்செயல்

Eastdelhi Marriedmanstabbed
By Petchi Avudaiappan Jan 20, 2022 11:51 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

தங்கள் மகளிடம் அடிக்கடி பேசி வந்த பக்கத்து வீட்டில் குடியிருந்த திருமணமான நபரை குடும்பமாக சேர்ந்து படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கிழக்கு டெல்லியின் திரிலோக்பூரி பகுதியைச் சேர்ந்த 29 வயதாகும் சல்மான் என்பவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். இவர் அண்டை வீட்டில் உள்ள ஹீனா என்ற பெண் ஒருவரிடம் திருமணத்துக்கு முன்பே நட்பாக பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்திருக்கின்றனர்.

இதனிடையே சல்மானுக்கு திருமணமாகிவிட திருமணமாகாத தங்களின் மகளுடன் பேசுவதற்கு ஹீனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சல்மானின் வீட்டிலும் ஹீனாவிடம் பேசுவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் இரு வீட்டாரின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் இருவரும் தொடர்ந்து நட்பாக பழகி வந்திருக்கின்றனர். அதே நேரத்தில் சல்மானின் குடும்பத்தினர் விஹார் பகுதிக்கு வீட்டை மாற்றிச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 18ம் தேதியன்று இரவு ஹீனா அழைத்ததன் பேரில் ஹீனா வீட்டுக்கு அருகே சென்றிருக்கிறார் சல்மான். இருவரும் வீட்டின் அருகே நின்றுகொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சல்மான் ஹீனாவிடம் பேசிக் கொண்டிருப்பதை ஹீனாவின் சகோதரி ஃபரீனா பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

இதனையடுத்து ஹீனாவின் தாயான நஸ்மாவும் அங்கு வந்து ஆத்திரத்தில் திட்டியுள்ளார். ஃபரினா உடனடியாக தனது சகோதரர் ஃபர்தீனிடம் இது குறித்து கூறியதால், ஃபர்தீன் மேலும் சிலருடன் அங்கு வந்துள்ளார். ஃபரினாவும், நஸ்மாவும், சல்மானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும், அவன் கதையை முடித்து விடு என ஃபர்தீனிடம் கூறியதால், ஃபர்தீன் சல்மானை கடுமையாக தாக்கி, கத்தியால் குத்தியுள்ளார்.

அதே நேரத்தில் விஷயம் குறித்து அறிந்து அங்கு வந்திருக்கிறார் சல்மானின் தாயார் மக்சுமா. தனது மகனை அனைவரும் சேர்ந்து தாக்கி கத்தியால் குத்துவதை பார்த்து அவர் அலறியிருக்கிறார். இதனால் பயந்து போன ஃபர்தீனும், பிறரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதனை தொடர்ந்து சல்மானை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரின் தாயார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இருப்பினும் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சல்மானை கொலை செய்துவிட்டதாக ஹீனாவின் குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து தலைமறைவாக இருந்து வரும் ஹீனாவின் குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.