காதலனுக்கு திருமணம்..நியாயம் கேட்டு திருமண மண்டபம் வரை சென்ற காதலி
திருவாரூரில் தன்னை காதலித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்த நபரிடம் நியாயம் கேட்க காதலி திருமண மண்டபத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குடவாசல் நல்லிச்சேரியை சேர்ந்த செல்வி என்பவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். செல்வியும் திருவாரூர் செம்மங்குடியைச் சேர்ந்த செந்தில் முருகனும் பல நாட்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.
கிரேன் ஆப்பரேட்டரான செந்தில் முருகன் பணி நிமித்தமாக சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றார். தற்போது ஊர் திரும்பிய அவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் செல்வி அய்யம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் செந்தில் முருகனுக்கும் அவரது வீட்டில் பார்த்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெறுவதை அறிந்திருக்கிறார்.
இதனையடுத்து செந்திலின் திருமணத்தை நிறுத்த அவர் மண்டபத்துக்கு நேரடியாக சென்றார். அப்போது போலீஸார் மற்றும் உறவினர்கள் என பலரும் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.
இதனால் செல்விக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பிரச்னை முற்றியதை அடுத்து செந்திலால் கைவிடப்பட்ட அந்தப் பெண்ணை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.