தாலிக்கு தங்கம் திட்டம் - விதிமுறைகளை கடுமையாக்கிய தமிழக அரசு

By Petchi Avudaiappan Sep 01, 2021 09:44 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான புதிய விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு ஏழைப்பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு திருமண உதவிதிட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவி திட்டம் என ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு பணம் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் இத்திட்டத்துடன் தாலிக்கும் தங்கம் என்ற பெயரில் தங்கம் வழங்கும் திட்டத்தினை கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார்.

உயர்கல்வி பயின்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும், பட்டதாரி பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், இதனுடன் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இத்திட்டத்தில் பயன்பெற்றவர்களுக்கான தங்கம், பணம் எதுவும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திருமண நிதியுதவி பெறுவதில் தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி *திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் கோரி விண்ணப்பிப்போரின் வீட்டில் யாரும் அரசுப் பணியில் இருக்கக்கூடாது. *வேறு ஏதேனும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயன்பெற்றிருக்கக் கூடாது. *மாடி வீடு - நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருந்தால் உதவித்தொகை வழங்கப்படாது. *ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். *திருமண மண்டபங்களில் நடந்த திருமணங்களுக்கு நிதியுதவி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தால் அந்த மனு தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.