”கூரை வீடு மட்டுமே சொத்து” இணையத்தில் வைரலாகும் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களில் போட்டியிடுகிறது. அதில் திருவொற்றியூர் தொகுதியும் அடங்கும். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதே தொகுதியில் தான் போட்டியிடுகிறார். இதனால் இந்த தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றியிருக்கிறது. அவரை எதிர்த்து சிபிஐ சார்பில் மாரிமுத்து என்பவர் போட்டியிடுகிறார். மிக எளிமையான பின்னணியைச் சேர்ந்தவர்.
வெறும் கூரை வீடு மட்டுமே இவரின் சொத்தாக உள்ளது. இவரின் வீடு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாரிமுத்துவின் எளிமையை பலரும் வியந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உரிமைக்கான போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இவரின் மனைவியும் விவசாய கூலியாக உள்ளார். தேர்தலில் போட்ட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது தொடர்பாக பேசிய மாரிமுத்து, “நான் பி.காம் பட்டதாரி. நான் வசித்த தெருவில் நான் ஒருவனே படித்தவன். நான் பட்டப்படிப்பு படித்திருந்தாலும் கூலி வேலைக்கு சென்றால்தான் அடுத்த வேளைக்கு சாப்பாடு என்ற நிலையில், எனது குடும்பம் இருந்தது.
எனது தாய், தந்தையர் சகோதரிகளோடு நாங்கள் கூலி வேலை செய்துதான் பிழைப்பு நடத்தி வந்தோம். இது ஒருபுறத்தில் இருக்க மற்றொரு புறத்தில் எங்கள் ஊர் கம்யூனிஸ்ட்டுகள் நிறைந்த பகுதி. உழைப்பாளிகளின் உரிமையை பாதுகாக்க வேண்டுமென்ற எனது அடிமனதில் இருந்த தேடல் காரணமாக நானும் பொதுவுடமை இயக்கத்தில் இணைந்து பணியாற்றினேன். தொடர்ச்சியாக இப்பகுதி மக்களுக்கு ஆற்றிய பணிகளை அங்கீகரித்து என்னை வேட்பாளராக நிறுத்தியுள்ளனர்.
கட்சியை கடந்து சாதாரண ஏழை என்கின்ற அடிப்படையில் எனக்கு கிடைத்த வாய்ப்பை இப்பகுதி மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர். இதன்மூலம் எதிர்காலத்திலும் எனக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதாகவே உணர்கிறேன். மனசாட்சிக்கு, மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படக்கூடாது என்பதில் எதிர்காலத்திலும் உறுதியாக இருப்பேன" என தெரிவித்தார்.