பிரபல யூடியூபர் மாரிதாஸ் அதிரடி கைது - போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு
சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்ததாக கூறி மாரிதாசை, மதுரை புதூர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் சற்று முன்னர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள யூ ட்யூபர்களில் ஒருவர் மாரிதாஸ். இவர் தனது யூ டியூப் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
ஏற்கெனவெ தனியார் தொலைக்காட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தவர் என்பதும், அதன் காரணமாக அவர்கள் பணி விலக்கம் செய்யப்பட்டதும், விலகியதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் அவரை கைது செய்ய திட்டமிட்டு அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அதே சமயத்தில், மாரிதாசை கைது செய்ய உள்ளதாக தகவல் கிடைத்தவுடன் பா.ஜ.க.வினரும், மாரிதாசின் ஆதரவாளர்களும் அவரது வீட்டின் முன்பு குவிந்தனர்.
தற்போது, பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியான சரவணன் உள்பட பலரும் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது
தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டில் நீண்டகாலமாக யூ டியூப் தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வந்த கிஷோர் கே சாமி, சாட்டை துரைமுருகன், ஆபாசமாக பெண்களிடம் பேசிய மதன் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதும், மாரிதாஸை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.