குடும்பத்தினர் கண் முன் மாவோயிஸ்டுகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்...!
சட்டீஸ்கரில் குடும்பத்தினர் கண் முன் மாவோயிஸ்டுகளால் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாவோயிஸ்டுகளால் கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர்
சட்டீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்டம் அவபள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பங்கரம் கிராமத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் நேற்று இரவு நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது பாஜக பிரமுகரை மாவோயிஸ்டுகள் தாக்கினர். அவரை மாவோயிஸ்டுகள் கோடரி மற்றும் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்தனர். உயிரிழந்த பாஜக தலைவர் நீலகாந்த் கக்கேம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தன் பகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக அரசியல்வாதியாக இருந்து வந்தார். கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவின் உசூர் மண்டல தலைவராக இருந்துள்ளார்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில்,
நக்சலைட்கள் கோடாரி மற்றும் கத்திகளுடன் ஒரு கும்பல் அவரை வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்றது.
அவரது குடும்பத்தினர் கண்முன்னே அவரை கொடூரமாக கொலை செய்தது. இத்தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலையை செய்துவிட்டு, கொலையாளிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.