‘இதெல்லாம் நடந்திருந்தா கேப்டன் தான் முதல்வர்’ - பிறந்தநாளில் மன்சூர் அலிகான் சொன்ன ரகசியம்
நாங்கள் விஜயகாந்த் உடனிருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வர் ஆகியிருப்பார் என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் நேரிலும், சமூக சமூகவலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர்கள் மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின் நடிகரும், தமிழ்த் தேசிய புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விஜயகாந்த் திரையுலகில் பிரபலம் அடைவதற்கு முன்பே பல உதவி இயக்குநர்களுக்கு உணவளித்தவர் என்றும், பல கலைஞர்களை உருவாக்கியவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.
மேலும் விஜயகாந்த்துடன் அரசியலில் இணைந்து பயணிக்க முடியாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும், நானும், லியாகத் அலி கானும் விஜயகாந்துடன் இருந்திருந்தால் இந்நேரம் அவர் முதல்வராக இருந்திருப்பார் என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.