பழம்பெரும் நடிகையின் சொத்தை அபகரிக்க முயற்சியா? - மன்சூர் அலிகான் மீது போலீசில் புகார்
மறைந்த பழம்பெரும் நடிகை கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்தை அபகரிக்க முயற்சிப்பதாக நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மறைந்த பழம்பெரும் நடிகையும், தமிழ் திரையுலகின் முதல் ஆக்ஷன் கதாநாயகியுமான கே.டி.ருக்மணிக்கு சொந்தமான சொத்துக்களை நிர்வகிக்க உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இடைக்கால நிர்வாகியை நியமித்து, தமிழக அரசின் சொத்தாட்சியர் கடந்த 1996ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்படி கே.டி.ருக்மணிக்கு சொந்தமாக தியாகராய நகர் பத்மநாபன் தெருவில் உள்ள ஒரு கட்டிடத்தை பராமரிப்பது, வாடகைக்கு விட்டு வாடகை வசூலிப்பது, அத்துமீறி நுழைபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை இடைக்கால நிர்வாகி கவனித்து வருகிறார்.
இதனிடையே சமீபத்தில் அந்த சொத்தை ஆய்வு செய்ய இடைக்கால நிர்வாகி சென்றபோது, அந்த கட்டிடம் சிதலமடைந்து இருப்பதும், அதை சட்டவிரோதமாக 10 பேர் ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றிவிட்டு கட்டிடத்தை அபகரிக்கும் நோக்குடன் நடிகர் மன்சூர் அலிகான் செயல்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.
மேலும் அந்த கட்டிடத்தில் ஒரு பகுதியை இடித்துவிட்டு மாற்றங்கள் செய்வதற்கும் மன்சூர் அலிகான் முயற்சிப்பதையும் இடைக்கால நிர்வாகி கண்டறிந்துள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக அரசு சொத்தாட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வகிக்கப்படும் சொத்தை சேதப்படுத்துவது கண்டனத்திற்குரியது என்றும், சட்ட ரீதியான நடவடிக்கைக்கு உட்பட்டது என்றும் நடிகர் மன்சூர் அலிகானை எச்சரித்துள்ளார். மன்சூர் அலிகானுக்கு எதிராக தி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.