வயசானா பட்டத்த விட்டுக்கொடுக்கணும்; இருவரும் அல்ல அவர்தான் சூப்பர்ஸ்டார் - லியோ பட நடிகர் பளீச்!
அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதை குறித்து நடிகர் மன்சூர் அலி கான் பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் "லியோ' திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது முடிவடைந்துள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தில் அர்ஜுன்,மன்சூர் அலி கான், கவுதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர்.
இந்த படத்திலிருந்து 'நா ரெடி தான்' என்ற பாடல் வெளிவந்து ஹிட் அடித்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் தமிழ் சினிமாவின் 'சூப்பர் ஸ்டார்' யார்? என்ற பேச்சுதான் இப்போது தமிழ் திரை உலகில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் இதற்காக ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் பதிவுகளைப் பதிவிட்டு சண்டையிட்டு வருகின்றனர்.
இது குறித்து சினிமா பிரபலங்களும் பல கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லியோ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் மன்சூர் அலி கான் அண்மையில் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அவரிடம் சூப்பர ஸ்டார் பஞ்சாயத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
மன்சூர் அலிகான் பேட்டி
அதற்கு பதிலளித்த மன்சூர் அலி கான் ' ஹிந்தியில் சூப்பர் ஸ்டாராக திலீப்குமார் இருந்தார். பிறகு ராஜேஷ் கண்ணா வந்தார். தமிழில் தியாகராஜ பாகவதர் இருந்தார். பின் எம்ஜிஆர் வந்தார். அதற்கு பிறகு ரஜினிகாந்த் வந்தார்.
ஒருவரின் மூன்று படங்கள் வரிசையாக ஓடி வசூலித்துவிட்டால் அவர்தான் உச்ச நட்சத்திரம் என்று கருதப்படுகிறது. வயதானால் பட்டத்தை விட்டுக்கொடுத்துவிட வேண்டும். ரஜினிகாந்த் ஒரிஜினலாகவும் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும். படத்தில் மட்டும் இருந்தால் எப்படி. நிஜத்திலும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் என்றால் அது எம்.ஜி.ஆர் மட்டும்தான்' என்று பேசியுள்ளார்.