‘’தெலுங்கானாவில் காளி சிலை காலடியில் மனித தலை ‘’ - நரபலியா ? திட்டமிட்ட கொலையா?
தெலங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள சாலையோர வழிபாட்டுத் தலமான காளி தேவி சிலையின் காலடியில் மனிதனின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று நேற்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
அதில் துண்டிக்கப்பட்ட தலையுடன் இருந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தவும், கொடூரமான இந்த குற்றத்தை செய்தவர்களை கண்டறியவும் எட்டு குழுக்களை அமைத்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
காளி சிலையின் காலடியில் தலையை வைத்த விதத்தை பார்க்குபோது இது நரபலியாக இருக்குமோ என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தேவரகொண்டா துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் ரெட்டி கூறுகையில், "30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் வேறு இடத்தில் கொல்லப்பட்டு, அவரது தலையை இந்த இடத்திற்கு கொண்டு வந்து சிலையின் காலடியில் வைத்ததாக சந்தேகிக்கிறோம்.
மேலும், அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகிறோம் .அந்த நபரின் உடலை இன்னும் கண்டுபிடிக்கவில்லை, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி குற்றவாளிகளைத் தேடி வருகிறோம் என தெரிவித்தார்
இந்த நிலையில்,சிலையின் காலடியில் வைக்கப்பட்ட துண்டிக்கப்பட்ட தலையின் திகிலூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.