வாய்ப்பை பறித்தார்; ஏன் இப்படி செய்தீர்கள் தோனி..? - மனமுடைந்து பேசிய மனோஜ் திவாரி!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து எம்.எஸ்.தோனி குறித்த ஆதங்கத்தை தெரிவித்துள்ளார் இந்திய வீரர் மனோஜ் திவாரி.
மனோஜ் திவாரி
இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி (38) கடந்த 2008-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் அரைசதத்துடன் 287 ரன்கள் எடுத்துள்ளார்.
3 டி20 போட்டிகளில் விளையாடி 15 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 65 முதல்தர போட்டிகளில் விளையாடி 10,195 ரன்களை குவித்துள்ளார். இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கடந்த சில வருடங்களாக ரஞ்சிக்கோப்பையில் விளையாடி வந்த மனோஜ் திவாரி நேற்றுடன் அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஒய்வு பெற்றார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தோனியிடம் இதை கேட்க விரும்புகிறேன். விராட் கோலி, ரோஹித் சர்மா அல்லது சுரேஷ் ரெய்னா யாரும் ரன் எடுக்காத ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் சதம் அடித்த பிறகும் நான் ஏன் அணியில் இருந்து நீக்கப்பட்டேன் என்று தோனியிடம் கேட்க விரும்புகிறேன்.
வேதனை
நான் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. நான் 65 முதல் தர போட்டிகளில் விளையாடி முடித்தபோது, எனது பேட்டிங் சராசரி 65 ஆக இருந்தது.
அப்போது ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்திருந்தது. நான் நட்பு ரீதியான ஒரு ஆட்டத்தில் 130 ரன்கள் எடுத்திருந்தேன், பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஒரு நட்பு ஆட்டத்தில் 93 அடித்தேன். அணியில் தேர்வாகிவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த எனக்கு பதிலாக அவர்கள் யுவராஜ் சிங்கை தேர்வு செய்தனர்.
சொல்லப்போனால் நான் சதமடித்து ஆட்டநாயகன் விருது வென்ற பின் 14 தொடர்ச்சியான போட்டிகளில் புறக்கணிக்கப்பட்டேன். பொதுவாக உச்சத்தில் இருக்கும் ஒரு வீரருக்கு நீங்கள் வாய்ப்பு கொடுக்காமல் போனால் அது அவரின் தன்னம்பிக்கையை உடைத்து விடும் என்று தெரியாதா?” என்று மனோஜ் திவாரி வேதனை தெரிவித்துள்ளார்.