மன்னார்குடியில் பிரபல டைலர் கடையில் திடீர் தீ விபத்து - ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
மன்னார்குடியில் பிரபல டைலர் கடையில் தீ விபத்து ஏற்பட்டதில், ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஆசாத் தெருவில் வசிப்பவர் சூரியநாராயணன். இவர் பெரிய கடைத்தெருவில் உள்ள பிரபல டைலர் கடை 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இந்த கடையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், உள்ளிட்ட பகுதியிலிருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தனர்.
இதன் பின்னர், கடையின் உள்பக்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் 28 பவர் தையல் மிஷின்கள், பேண்ட், சர்ட் உள்ளிட்ட பொருட்கள் எரிந்ததால் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
இதனால் அந்த பகுதி சிறுது நேரம் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் அழகர்சாமி , வட்டாட்சியர் ஜீவானந்தம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பார்வையிட்டு கடையின் உரிமையாளர் சூரிய நாராயணனிடம் ஆறுதல் கூறினார்கள்.