ரோட்டுல அமைச்சர்கள் நடமாட முடியாது சொல்லிட்டேன்.. மன்னார்குடி ஜீயர் எச்சரிக்கை
இந்து விரோத செயல்களில் ஈடுபட்டால் தமிழ்நாட்டில் எந்த அமைச்சர்களும் சாலைகளில் நடக்க முடியாது என மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. இதனிடையே இம்மாத இறுதியில் (மே 22) நடக்கவுள்ள தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இந்த பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக 2019 ஆம் ஆண்டு தருமபுர ஆதீனத்தின் 27 வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றார். பதவியேற்ற நாளிலேயே இந்த பட்டினப் பிரவேச நிகழ்ச்சி எதிர்ப்பை மீறி நடந்தது.
இதற்கிடையில் சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இந்த நிகழ்வை வைத்து சிலர் அரசியல் செய்ய முயல்வதாகவும், நீதிமன்றத்துக்கு இது கொண்டு செல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் திமுக இந்து மதத்துக்கு எதிரி இல்லை என்று கூறிய அவர், தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசம் தொடர்பாக முதலமைச்சர் நல்ல முடிவெடுப்பார் என்றார். இந்நிலையில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து மன்னார்குடி ஜீயர் செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ ராமனுஜர் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது பட்டினப் பிரவேசம் என்பது சம்பிரதாயமான நிகழ்வு. இதை எந்த ஒரு இயக்கத்தாலும் தடுக்க முடியாது. நிச்சயம் பட்டினப் பிரவேசம் நடக்கும். யாராலும் அதை நிறுத்திவிட இயலாது. இந்து விரோத செயல்களில் ஈடுபடுவது, கோயில்களில் தலையிடுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அந்த அமைச்சராலும் சாலையில் நடக்க முடியாது என எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.