பெண்களை தவறாக காட்டியதா ரஜினி படங்கள்? - ஆர்.ஜே.பாலாஜி பேச்சால் சர்ச்சை
ரஜினி படங்களில் பெண்களை தவறாக சித்தரித்துள்ளதாக பிரபல நடிகரும் ஆர்.ஜே.வுமான பாலாஜி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி படமான பதாய் ஹோ படமானது தமிழில் வீட்ல விஷேசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இதனிடையே தனியார் கல்லூரியில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட ஆர்.ஜே.பாலாஜி பேசிய கருத்துகள் ரஜினி ரசிகர்கள் இடையே எரிச்சலை கிளப்பியுள்ளது.
அதாவது ரஜினிகாந்த் நடித்த மன்னன் மற்றும் படையப்பா உள்ளிட்ட படங்களில் பெண்களை ரொம்பவும் தப்பா காட்டியது தான் பசங்களுக்கும் பெண்களுக்கும் இடையே சமூகத்தில் மிகப்பெரிய வேற்றுமை உருவாகக் காரணம் என தெரிவித்துள்ளார்.
#Padayappa & #Mannan Portrayed Women Very Bad - #RjBalaji pic.twitter.com/zWBc13m3NU
— chettyrajubhai (@chettyrajubhai) May 20, 2022
படையப்பா படத்தில் வீட்ல வேலை செய்ற பொண்ணு நல்லவ, வெளிநாட்டுல படிச்சிட்டு வர பொண்ணு கெட்டவன்னு காட்சிப்படுத்தியிருப்பாங்க...இதேபோல் மன்னன் படத்தில் படிச்சுட்டு கம்பெனி நடத்துற விஜயசாந்தி கெட்டவங்க, காபி போட்டு கொடுக்கிற குஷ்பு நல்லவங்களா காட்டியிருப்பாங்க அப்படியென கூறினார்.
அதே நேரத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்த நேர்கொண்ட பார்வை படத்தை பாராட்டியும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார். ஆணும் பெண்ணும் சமம் என்பதை மையமாக கொண்டு பள்ளி, கல்லூரிகளில் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ளக் கூடாது என பிரித்து வைப்பது தவறு என்கிற கருத்தை முன் வைத்து பேச அந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.