அறிஞர் அண்ணா பிறந்த ஊரில் விழுந்த TTF வாசன் மாபெரும் தலைவனாவான் - இயக்குநர் பேச்சு !
டிடிஎஃப் வாசன் நடிக்கவிருக்கும் மஞ்சள் வீரன் படத்தின் இயக்குனர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
டிடிஎஃப் வாசன்
கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரபல பைக் ரைடரும், யூடியூபருமான டிடிஎஃப் வாசன் கடந்த மாதம் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்ய முற்பட்டு விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து டிடிஎஃப் வாசனை மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பாலுசெட்டி சத்திரம் போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 4 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு, ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
மேலும் அவரின் ஓட்டுநர் உரிமமும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து ஜாமி கோரி டிடிஎஃப் வாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று ஜாமின் பெற்று அவர் புழல் சிறையிருந்து விடுதலையானார்.
வருவான், வெல்வான்
வெளியே வந்ததும் செய்தியாளர்களை சந்தித்த வாசன் "கை போனதைவிட, லைசென்ஸ் போனபோது கண் கலங்கிவிட்டேன். பைக்கும் ஓட்டுவேன். படத்திலும் நடிப்பேன். ஆர்வத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
விபத்துக்குள்ளாகி சிறைக்கு செல்வதற்கு முன் வாசன் 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தமாகியிருந்தார். படத்தின் போஸ்டர்களும் வெளியாகியிருந்தது. அந்த படத்தின் இயக்குநரான செல்லம் என்பவரும் நேற்று வாசனை வரவேற்க சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் இயக்குநர் செல்லம் தெரிவித்ததாவது "தம்பி டிடிஎஃப் வாசன் செப்டெம்பர் 17ம் தேதி பைக்கிலிருந்து விழுந்தார்.
அது பெரியார் பிறந்த தினம். அதுமட்டுமல்லாமல் தம்பி வாசன், காஞ்சிபுரத்தில்தான் விழுந்தார். அது அறிஞர் அண்ணா பிறந்த ஊர். எனவே பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே விழுந்த ஒருவன் (டிடிஎஃப் வாசன்) மாபெரும் தலைவனாக இந்த தமிழ் மண்ணிலே வருவான், வெல்வான்" என்று பேசியுள்ளார்.