மணிப்பூர் பாலியல் வன்கொடுமை விவகாரம்; யானை மலை மீது ஏறி பொதுமக்கள் போராட்டம்!
மணிப்பூர் கலவரத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மணிப்பூர் கலவரம்
மணிப்பூரில் சில மாதங்களாகவே பழங்குடியின மக்களுக்கும் மேல்தட்டு மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்து வந்தது. தற்பொழுது பழங்குடியினத்தை சேர்ந்த இரு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் கைவைத்து இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காணொலி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர், இதில் முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகிறது.
போராட்டம்
இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக அங்குள்ள யானை மலை மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டி உச்ச நீதிமன்ற நீதிபதில தலைமையில் உண்மை அறியும் குழு நியமிக்க வேண்டும், மணிப்பூர் அரசு மற்றும் ஆளுநர் ஆகியோரை கண்டித்து பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் குற்றம் செய்தவர்களை மணிப்பூர் மண்ணிலேயே தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவல் அறிந்து வந்த ஒத்தக்கடை டிஎஸ்பி மற்றும் வட்டாட்சியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு மணி நேரத்திற்கு பிறகு கீழே அழைத்து வந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் மீதும் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது