ஏ.எஸ்.பி ஆகும் மீராபாய் சானு: ஒலிம்பிக் பதக்கத்திற்கு கிடைத்த வெகுமதி
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்திய மீராபாய் சானுவிற்கு மணிப்பூர் அரசு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பாலைச் சேர்ந்த மீரா பாய் டோக்கியோ ஒலிம்பிக்கில் பளு தூக்குதல் போட்டியின் மகளிர் 49 கிலோ எடை பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதனிடையே டோக்யாவில் இருந்து விமானம் மூலம் தனது பயிற்சியாளருடன் மீரா பாய் இன்று டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாயை கௌரவிக்கும் விதமாக மணிப்பூர் காவல்துறையில் அவருக்கு கூடுதல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் முதலமைச்சரின் செயலகம் வெளியிட்டுள்ளது.