கல்லூரி மாணவன் மரணம் குறித்து நீதி விசாரணை தேவை : தமிழக அரசுக்கு சீமான் வளியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் நீர்கோழியேந்தலை சேர்ந்த லட்சுமணகுமாரின் 21 வயது மகன் மணிகண்டன் கல்லூரி மாணவர் ஆவார்.
நேற்று மாலை பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த மணிகண்டன் டூவீலரை நிறுத்தாமல் சென்றதால் போலீசார் அவரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பின்னர் மணிகண்டனின் டூவீலர் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
"இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டன் காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு, மர்மமான முறையில் உயிரிழந்த செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.
அவரை இழந்து ஆற்ற முடியாதப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
நல்ல உடல்நலத்தோடு இருந்த மணிகண்டன் திடீரென மரணித்திருப்பது காவல்துறையினர் தாக்குதலால் நிகழ்ந்ததாக இருக்கலாம் என அவரது பெற்றோரும், பொதுமக்களும் தெரிவிக்கும் ஐயப்பாட்டிற்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.
காவல்துறையின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் இளைஞர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதும், அவ்வப்போது மரணமடைவதும் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் நடந்தேறியிருக்கிற தம்பி மணிகண்டனின் மரணம் கொலையாக இருக்கலாம் எனும் வாதத்தில் அடிப்படையில்லாமலில்லை.
ஆகவே, தமிழக அரசு இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு கல்லூரி மாணவர் தம்பி மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து உரிய நீதிவிசாரணை நடத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டுள்ளார்.