தீவிர புயலில் இருந்து சாதாரண புயலாக வலுகுறைகிறது மாண்டஸ் - தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழையானது பெய்து வருகிறது.
நெருங்கும் புயல்
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது. இன்று இரவு புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 5ம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைகொண்டிருந்தது.
பின்னர் வட-மேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயல் சென்னையில் இருந்து 270 கிமீ தொலையில் உள்ளது.இதையடுத்து காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் சென்னையில் இருந்து 270 கிமீ துாரத்திலும், காரைக்காலில் இருந்து 200 கிமீ துாரத்தில் நிலவி வருகிறது. மாண்டஸ் புயலின் நகர்வை கூர்மையாக கவனித்து வருகிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
வலுகுறைந்தது
இது குறித்து தென் மண்டல இயக்குநர் பாலசந்தர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வங்கக்கடலில் நிலவும் மாண்டோஸ் தீவிர புயல் இன்று காலை காரைக்காலில் இருந்து சுமார் 200 கிமீ கிழக்கேயும், சென்னையிலிருந்து சுமார் 270 கி.மீ தென் கிழக்கேயும் மையம் கொண்டுள்ளது.
இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுகுறைந்து இன்று நள்ளிரவு - நாளை அதிகாலை மஹாபலிபுரம் அருகே புயலாக கரையை கடக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.