மீண்டும் தாரை வார்க்கப்பட்ட மணப்பாறை திமுக - அமைச்சர்களின் கோஷ்டி மோதல்!
1969-ல் மணப்பாறை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது முதல் தற்போது நடந்து முடிந்த 7-வது நகர்மன்றத் தேர்தல் வரை அனைத்து தேர்தல்களிலும் திமுகவே மணப்பாறை நகரத் தலைவர் பதவியை கைப்பற்றி இருக்கிறது.
இதில் நான்கு முறை திமுக கோட்டையில் கொடி நாட்டிய காலம். இப்படியான வரலாற்றைக் கொண்ட திமுகவுக்கு இம்முறை பிரகாசமான வாய்ப்பிருந்தும்,
அதை அதிமுகவுக்கு தாரை வார்த்திருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சர்யத்தையும், திமுக அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளையும் உண்டாக்கி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மணப்பாறை திமுகவுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், மாறாக கூட்டணியில் இருந்த மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வெற்றி வாய்ப்பு கண் முன்னரே பிரகாசமாக இருந்தபோதும் தமிழ்நாடே நன்கு அறிந்த மணப்பாறை தொகுதியில் திமுக நேரடியாக கால்பதிக்காதது பலரிடத்திலும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதன்காரணம் அறிய முயன்றபோது தெரியவந்தது நேரு மற்றும் அன்பில் இருவருக்குமான கோஷ்டி மோதல். இதனிடையிலும் கலைஞருக்காகவும் திமுக எனும் கட்சிக்காகவும் காலம்காலமாக உழைத்து ஓடாக தேய்ந்து போன மணப்பாறை திமுக நிர்வாகிகள் காலத்தின் கட்டாயத்தாலும்,
தலைமையின் வார்த்தைகளுக்கும் கட்டுப்பட்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
சட்டமன்ற தேர்தலில் விட்டதை நகர்மன்ற தேர்தலில் ஈடுசெய்துவிடலாம் என்றிருந்த திமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும்,
வரலாற்றில் இல்லாத வகையில் நகர்மன்ற தலைவர் பதவியை தாம்பூல தட்டில் வைத்து அதிமுகவுக்கு கொடுத்திருப்பது இருபெரும் அமைச்சர்களின் கோஷ்டி மோதலின் உச்சமாக பார்க்கப்படுகிறது.
இதேநிலை நீடிக்கும் பட்சத்தில் மணப்பாறைக்கும் திமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிற நிலை கூட உருவாக வாய்ப்பு இருக்கிறது.
திமுக தலைமை உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காணாதவரை மணப்பாறை திமுகவின் நிலை பரிதாபம் என்பதே கள எதார்த்தம்.