4ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளியில் வைத்து நடந்த கொடூரம்
4ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் குற்றங்கள்
பெண்களுக்கு எதிரான குறிப்பாக பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரு நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 3 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் 4ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளியில் வைத்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4ஆம் வகுப்பு மாணவி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மணப்பாறைபட்டி சாலையில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 4ஆம் வகுப்பு சிறுமிக்கு பள்ளியின் தாளாளர் சுதாவின் கணவர் வசந்த குமார் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு சென்ற மாணவி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்று பாலியல் தொல்லை அளித்த வசந்த குமாரை தாக்கியுள்ளனர்.
மேலும் வகுப்பறையில் இருந்த ஜன்னல் கண்ணாடி மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணகியையும் அடித்து உடைத்தனர். அதனை தொடர்ந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென சாலை மறியலில் இறங்கினர்.
4 பேர் கைது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி சரக டிஐஜி வருண் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இதன் பிறகு பள்ளி தாளாளர் சுதா, அவரது கணவர் வசந்த குமார், இளஞ்செழியன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த பள்ளியின் முதல்வர் ஜெயலட்சுமி மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். முக்கிய குற்றவாளி வசந்த குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.