பட்டியல் சமூக மாணவர் பைக் ஓட்டியதால் ஆத்திரம் - கையை வெட்டிய இளைஞர்கள்
பட்டியல் சமூக மாணவர் பைக் ஓட்டியதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் அவரது கையை வெட்டியுள்ளனர்.
புல்லட் பைக்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மேலப்பிடவூர் கிராமத்தை சேர்ந்த ராமன் - சின்னம்மா தம்பதியின் மகன் அய்யாசாமி. இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில் 3ஆம் ஆண்டு பயின்று வருகிறார்.
இவரது தந்தை சிறு வயதிலே இறந்த நிலையில், தனது சித்தப்பாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் அவரது சித்தப்பா புல்லட் பைக் ஒன்று வாங்கிய போது மாற்று சமூகத்தை சேர்ந்த சிலர் அந்த பைக்கை சேதப்படுத்தியதாக காவலநிலையத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
வெட்டப்பட்ட கை
இந்நிலையில் நேற்று அய்யாசாமி அந்த பைக்கில் கல்லூரி சென்று விட்டு திரும்பி வரும் போது, அவரை மறித்த மாற்று சமூகத்தை சேர்ந்த 3 இளைஞர்கள், 'இந்த சாதியில் பிறந்து விட்டு எப்படி எங்கள் முன்னாடி பைக் ஓட்டுற, இந்த கை இருந்த தானே பைக் ஓட்டுவ' என கூறி அவரை சரமாரியாக தாக்கி அவரது இரு கையையும் வெட்டியுள்ளனர்.
அவர்களிடம் தப்பித்து அய்யாசாமி வீட்டிற்கு வந்த நிலையில், அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் அந்த இளைஞர்கள் அய்யாசாமியின் வீட்டிற்கு சென்று வீட்டையையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு ஆகிய 3 இளைஞர்களை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.