மானாமதுரை விசாரணை கைதி மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
மானாமதுரையில் விசாரணை கைதி உயிரிழந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மானாமதுரை ஜீவா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார், இவரது நண்பர் அழகர், கடந்த 5ம் தேதி வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
கிருஷ்ணராஜபுரம் பகுதியில் செல்லும் போது அதேபகுதியை சேர்ந்த இருசக்கர வாகனத்தில் வந்த ஆகாஷ் டெல்ஷன் மற்றும் குணா ஆகியோர் மோதினர்.
இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதுநடந்து முடிந்த நிலையில் அப்பகுதியில் உள்ள மயானம் அருகே ஜெயக்குமார், அழகர் பேசிக்கொண்டிருந்த போது, ஆகாஷ் டெல்ஷன் மற்றும் குணா அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பொலிசார் இருவரையும் தேடி வந்த நிலையில், மேலப்பசலை பாலம் அருகே நின்று கொண்டிருந்தவர்களை கைது செய்தனர்.

இதில் ஆகாஷ் டெல்ஷன் கீழே விழுந்ததில் வலது காலில் முறிவு ஏற்பட்டது, தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தன் மகன் இறப்புக்கு பொலிசார் தான் காரணம் என அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியதுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, பேருந்துகள் மாற்றுவழித்தடங்களில் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்து ஆகாஷ் டெல்சனின் பெற்றோர், என் மகனை ஒரு வழக்கில் தேடுவதாக கூறி பொலிசார் அழைத்து சென்றனர், அப்போது உன் மகன் கையில் கிடைத்தான் கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.
சிறிது நேரத்தில் உன் மகனை கைது செய்து விட்டோம் எனக்கூறி எங்களை விடுவித்தனர், மருத்துவமனையில் என் மகனை பார்த்த போது பொலிசார் அடித்ததாக கூறினான், சிறிது நேரத்தில் இறந்துவிட்டான்.
எனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளது, அடித்தே கொன்றுள்ளனர் என குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.