வேலையை விட்டு நிறுத்தியதால் ஆத்திரம் - மேனேஜரை அடித்துக்கொன்ற ஊழியர்கள்
வேலையை விட்டு நிறுத்திய மேலாளரை ஊழியர்கள் கொலை செய்துள்ளனர்.
மேனேஜர் கொலை
ஆந்திர மாநிலம் குடூர் பகுதியைச் சேர்ந்த சாய்பிரசாத் (45), மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல் சாவடியில் தனியாருக்கு சொந்தமான கன்டெய்னர் யார்டில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவரது குடும்பம் ஆந்திராவில் உள்ள நிலையில், இவர் இங்கு அறை எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
வேலையை விட்டு நிறுத்தம்
மணலி புதுநகர் காவல்துறையினர், சாய் பிரசாத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில், கடந்த 5 ஆம் தேதி தனது நிறுவனத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளரான பாலாஜி(25), முன் அனுமதி இல்லாமல் குறித்த நேரத்தை விட முன்னதாகவே பணியில் இருந்து சென்றுவிட்டார். இதனால் பாலாஜியை மேனேஜர் சாய் பிரசாந்த் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, சக ஊழியர்களான, முகிலன்(21), பார்த்தசாரதி(22), ஷியாம்(20), மணிமாறன்(20) ஆகியோருடன் சாய்பிரசாத்தின் அறைக்கு உறங்கிக் கொண்டிருந்த அவரை ராடு மற்றும் இரும்பு ஆயுதங்களை கொண்டு சரமாரியாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பியுள்ளனர். இவர்கள் 5 பேரையும் கைது செய்துள்ள காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்தனர்.