பெண் ஊழியரை எரிக்க முயன்ற வழக்கு.., இளைஞரை சுட்டுப்பிடித்த போலீஸ்
பொன்னேரியில் மருத்துவமனை ஊழியர் ராஜேஸ்வரியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்ற பிரகாஷ் என்ற இளைஞரைக் காவல்துறையினர் சுட்டுப்பிடித்தனர்.
சுட்டுப்பிடித்த போலீஸ்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியில் இருந்த ராஜேஸ்வரி (35) என்பவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயன்ற வழக்கில் பிரகாஷ் என்பவரை போலீசார் தேடி வந்தனர்.
இந்த சம்பவத்தில் 85% தீக்காயமடைந்த ராஜேஸ்வரி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பிரகாஷ் பெருஞ்சேரி மயான பூமி அருகே பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் போலீசார் அங்கு சென்று பிரகாஷை பிடிக்க முயன்றனர்.

அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற பிரகாஷ், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் உதவி ஆய்வாளர் தமிழரசனை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தற்காப்புக்காக காவல் ஆய்வாளர் சிவக்குமார் துப்பாக்கியால் பிரகாஷின் காலில் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்த பிரகாஷ் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கத்திக்குத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளர் தமிழரசனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக, ராஜேஸ்வரி பணிக்கு வரும்போது அவரிடம் பிரகாஷ் பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தயார் நிலையில் போர் விமானங்கள் : ஹவுதிகள் மீதான தாக்குதல் : மூன்று முறை முடிவை மாற்றிய ட்ரம்ப் IBC Tamil