கடலுக்கு அடியில் 93 நாள்கள் வாழ்ந்த நபர்.. 10 வயது குறைந்த அதிசயம் - அதெப்படி?
அட்லாண்டிக் பெருங்கடலில் நீருக்கடியில் வாழ்ந்தவர் 10 வயது இளமையாக மாறியுள்ளார்.
93 நாட்கள்
அமெரிக்காவில், அழுத்தமான சூழலில் நீருக்கடியில் வாழ்வதால் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை குறித்து அறிய விஞ்ஞானிகள் திட்டமிட்டனர். இதற்காக ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஜோசப் டிதுரி (56) என்பவர் அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழத்தில் மூடப்பட்ட படகுடன் 3 மாதங்கள் தங்கவைக்கப்பட்டார்.
இந்நிலையில் 93 நாட்களுக்கு பிறகு அவர் கடலை விட்டு வெளியேறிய போது 10 வயது இளமையாக மாறியுள்ளார். இது விஞ்ஞானிகளை அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. இதனையடுத்து ஜோசப் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட டெலோமியர்ஸ் 20% நீளமாகி இருந்தது.
உலக சாதனை
டெலோமியர்ஸ்என்பது குரோமோசோம்களின் முனைகளில் உள்ள டிஎன்ஏ கேப்ஸ். இது பொதுவாக வயதுக்கு ஏற்ப சுருங்கி விடும். மேலும், அவரின் ஸ்டெம் செல் எண்ணிக்கையும் அதிகரித்தது. அவரது ஒட்டுமொத்த ஆரோக்கியமும் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டது.
அதேபோல் கடலுக்கு அடியில் நல்ல தூக்கமும் இருந்துள்ளது. அவரது கொழுப்பின் அளவு 72 புள்ளிகள் குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் நீருக்கடியிலுள்ள அழுத்தம் காரணமாக ஏற்பட்டதாகவும், இது உடலில் பல நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஜோசப் டிதுரி ஏற்கனவே 30 அடிக்குக் கீழே நீருக்கடியில் அமைந்திருக்கும் ஜூல்ஸ் அண்டர்சீ லாட்ஜில் 74 நாள்கள் வரை தங்கியிருந்து உலக சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.