ஆற்று பாலத்தில் மதுபோதையில் இளைஞர் செய்த செயல்: மிரண்டு போன பொதுமக்கள்

chengalpattu chennairain chennaiflood
By Petchi Avudaiappan Nov 11, 2021 05:09 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

செங்கல்பட்டு அருகே பாலாற்றின் பாலத்தின் அடியில் இளைஞர் ஒருவர் மதுபோதையில் 3 நாட்களாக சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்தில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில நாட்களாகச் சென்னை, செங்கல்பட்டு உட்பட வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாகச் செங்கல்பட்டு அருகே பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

பாலாற்றில் சுமார் 13,500 கன அடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாலாற்றுப் பாலத்தின் அடியில் ஒருவர் சிக்கியுள்ளதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். 

ஆனால் வெள்ளம் அதிகளவில் செல்வதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாகப் போராடி பாலாற்றின் கீழ் சிக்கியிருந்த நபரை மீட்டனர்.

முதல்கட்ட விசாரணையில் அவர் மதுராந்தகம் அடுத்த கரிக்கலி பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பதும் மதுபோதையில் ஆற்றில் படுத்து உறங்கியதும் தெரியவந்தது. கண் விழித்துப் பார்த்தபோது இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் பாலாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார்.

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.