“மது வாங்கி அருந்தினால் போதை இல்லை” - அமைச்சருக்கு கடிதம் எழுதிய குடிமகன்
தான் வாங்கி குடித்த மதுவில் போதை ஏறவில்லை என்றும், அதிகாரிகள் அந்த கடையில் சோதனை செய்ய வேண்டும் என்றும் மாநில அமைச்சருக்கு குடிமகன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜயின் மாவட்டத்தில் உள்ள தனியார் வாகன காப்பகத்தில் வேலை பார்க்கும் லோகேந்திரா சோதியா என்பவர் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிற்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில் குறிப்பிட்ட ஒரு மதுபான கடையில் இருந்து மது வாங்கி அருந்தினால் போதை ஏற மறுக்கிறது. இதனால் அந்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அதாவது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 குவார்ட்டர் பாட்டில்களை வாங்கி குடித்ததாக கூறியிருந்தார். இந்த புகார் கடிதத்தை அவர் உள்ளூர் கலால் துறை அதிகாரிகளுக்கும், மாநில அமைச்சருக்கும் அனுப்பியிருந்தார்.
அதேசமயம் உணவு, எண்ணெய் போன்றவற்றில் கலப்படம் நடப்பதாக செய்திகள் வந்த நிலையில் தற்போது மதுவிலும் கலப்படம் நடக்கிறது. இது மிகவும் கவலை அளிப்பதாகவும், நுகர்வோர் மன்றத்திற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சோதியா பல ஆண்டுகளாக குடித்து வருகிறார், உண்மையான மற்றும் போலி மதுபானங்களுக்கு வித்தியாசம் தெரியும் என அவரின் வழக்கறிஞர் நரேந்திர சிங் தாக்டே கூறியுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் வைரலாகி வருகிறது.