ரூ.100 கோடி தானம் வழங்கிய தொழிலதிபர் - 73 முறை கத்தியால் குத்தி கொன்ற பேரன்
சொத்துபிரச்னையில் பேரன் 73 முறை தாத்தாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ரூ.100 கோடி தானம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரான ஜனார்தன ராவ் (86) வேல்ஜன் குழும நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு புற்றுநோய், இதயநோய் சிகிச்சை மையம் அமைக்க நிதியுதவி வழங்கி உள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கும் பல கோடிகளை காணிக்கையாக வழங்கி உள்ளார். இதுவரை ஏறத்தாழ ரூ.100 கோடிக்கும் மேல் தானம் வழங்கியுள்ளார்.
சொத்து பிரச்சினை
இவருக்கு 2 மகள்கள் உண்டு. இவருடைய சொத்துக்களை பிரிக்கும் போது மூத்த மகள் வழி பேரன் ஸ்ரீகிருஷ்ணாவை தனது நிறுவனத்தின் இயக்குநராக நியமனம் செய்துள்ளார். இளைய மகள் வழி பேரன் கீர்த்தி தேஜூக்கு (28) ரூ.4 கோடி மதிப்பிலான பங்குகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் தனது மேல்படிப்பை முடித்து விட்டு வந்த கீர்த்தி தேஜ் தனது தாய் சரோஜினி தேவியுடன் கடந்த 6 ஆம் தேதி அன்று தனது தாத்தா ஜனார்தன ராவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
கத்திக்குத்து
அப்போது சரோஜினி தேவி சமையலறையில் இருந்த போது, சொத்து பிரச்சினை தொடர்பாக தாத்தாவிற்கு பேரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கீர்த்தி தேஜ் தனது தாத்தா ஜனார்தன ராவை 73 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஜனார்தன ராவ் உயிரிழந்தார். சத்தம் கேட்டு வந்த சரோஜினி தேவி தடுக்க முயன்ற போது, அவரையும் 4 முறை கத்தியால் குத்தியுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது கீர்த்தி தேஜ், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.