10 வயதில் ரூ. 37.50 திருட்டு - 54 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த தொழிலதிபர்
54 ஆண்டுகளுக்கு முன் திருடிய 37.50 ரூபாயை தொழிலதிபர் தற்போது திருப்பியளித்துள்ளார்.
தொழிலதிபர்
கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் சொந்தமாக கேட்டரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இலங்கை தமிழரான இவர் 1977 ஆம் ஆண்டு தனது 17 வயதில் தமிழ்நாட்டிற்கு வந்து குடியேறி விட்டார்.
1970 ஆம் ஆண்டு ரஞ்சித், இலங்கையில் வசித்து வந்த போது அங்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தேயிலை எஸ்டேட்டில் பணியாளர்களாக இருந்த சுப்பிரமணியம்-எழுவாய் தம்பதி வீட்டை காலி செய்ய ரஞ்சித்தை அழைத்துள்ளனர்.
ரூ.37.50 திருட்டு
அப்போது தலையணை அடியில் இருந்த ரூ.37.50 பணத்தை திருடியுள்ளார். பணத்தை திருடியது நீண்ட காலமாக அவரின் மனதை உறுதி வந்துள்ள நிலையில் அதை திருப்பியளிக்க முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இலங்கை சென்ற ரஞ்சித், சுப்பிரமணியம்-எழுவாய் தம்பதி உயிரோடு இல்லை என்பதை அறிந்த அவர், அவர்களின் வாரிசிடம் பணத்தை திருப்பி கொடுக்க முடிவு செய்துள்ளார். அவர்களுக்கு 3 மகன்கள் ஒரு மகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
திருப்பியளிப்பு
3 மகன்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 70,000 ரூபாயை வழங்கியதோடு, புத்தாடைகளை கொடுத்துள்ளார். மேலும், அவர்களின் மகள் திருச்சியில் வசிப்பது தெரிய வந்துள்ள நிலையில் அவர்களையும் நேரில் சந்தித்து ரூ.70,000 வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியின் பேத்தி பவானி, ‛‛அவர் எங்கள் பாட்டி வீட்டில் காசு எடுத்ததாகவும், அதனை திரும்ப தருவதாகவும் கூறினார். அதை கேட்டபோது ஷாக் ஆகிவிட்டேன். இந்த காலத்தில் இப்படியொரு ஆளா என ரொம்ப சந்தோஷமாக இருந்தது'' என்றார்.
இது தொடர்பாக பேசிய ரஞ்சித், "பணத்தை அவர்களின் வாரிசுகளுக்கு திருப்பி கொடுத்த தருணம் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. எனக்கு யாரிடமும் கடன் இருக்க கூடாது. எனவேதான் பணத்தை தேடி சென்று கொடுத்தேன்" என தெரிவித்துள்ளார்.