மனிதருக்கு பன்றியின் இருதயத்தை பொருத்தி மருத்துவர்கள் சாதனை : எங்கு தெரியுமா?
இந்த நவீன மருத்துவ உலகில் , உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது ஒரு புதிய வகை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
ஆம், உலகில் முதன் முறையாக மனிதர் ஒருவருக்கு பன்றியின் இதயத்தை வெற்றிகரமாக பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் சிகாகோ பகுதியைச் சேர்ந்த டேவிட் பென்னட்(57) கடந்த சில ஆண்டுகளாக இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இவர் இதற்காக பல முறை சிகிச்சை எடுத்தும் குணம் அடையவில்லை. இவரை சமீபத்தில் பரிசோதித்த மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து இவருக்கு பன்றியின் இதயத்தை வைத்து அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விர்ஜினியாவிலிருக்கும் ஒரு ஆராய்ச்சி மையத்திலிருந்து பன்றியின் இதயத்தை வாங்கி அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
அதில், கடந்த வெள்ளிக்கிழமை 8மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு பென்னட் தற்போது தேறி வருகிறார். அவருடைய உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம் ஆகியவை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பன்றியின் நுரையீரல் மற்றும் கல்லீரல் ஆகிய இரண்டையும் மனிதர்களுக்கு வைக்கும் அறுவை சிகிச்சை தொடர்பாகவும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அதுவும் வெற்றி அடையும் பட்சத்தில் அதுவும் மருத்துவ துறையில் பெரிய மையில் கல்லாக அமையும் என கூறப்படுகிறது.