வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்த நபருக்கு அமேசான் செய்த செயல் - ஆர்டர் செய்தவர் அதிர்ச்சி
கொல்கத்தாவில் அமேசான் ஆன்லைனில் ஆர்டர் செய்த நபருக்கு வேறு பொருட்கள் மாற்றி வழங்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த சயான் மஜும்தார், பிரபல ஆன்லைன் விற்பனைதளமான அமேசானில் கடந்த டிசம்பர் 9ம் தேதி Racold geyser எனப்படும் வாட்டர் ஹீட்டரை ஆர்டர் செய்துள்ளார். இதற்காக ரூ.7,499யையும் அவர் செலுத்தியுள்ளார்.
சில நாட்கள் கழித்து அவருக்கு பார்சல் வந்துள்ளது. அதை ஆர்வமுடன் பிரித்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம்,வாட்டர் ஹீட்டருக்கு பதிலாக மேகி நூடூல்ஸ், டிடர்ஜெண்ட் ஆகியவை அவருக்கு பார்சலில் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து அமேசான் நிறுவனர் Jeff Bezos மற்றும் அமேசான் இந்தியா நிறுவனத்தை டேக் செய்து , “வாட்டர் ஹீட்டர் ஆர்டர் செய்த எனக்கு என்ன கிடைத்துள்ளது என்பதை பாருங்கள்.
இது தொடர்பாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு பேசியபோது மன்னிப்புக்கோரும் பண்பு கூட அவர்களிடம் இல்லை. என்ன மாதிரியான வாடிக்கையாளர் சேவை இது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பின் ஊடகம் ஒன்றிற்கு சயான் அளித்த பேட்டியில் தனது பணத்தை திருப்பி தருவதாக அவர்கள் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட குழுவிற்கு அனுப்பியுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.