‘திருந்தி வாழ்ந்த இளைஞர் கொலை’ - சென்னை திருவொற்றியூரில் பயங்கரம்
சென்னை திருவொற்றியூர் பகுதியில் திருந்தி வாழ்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் கார்கில் நகர் பகுதியைச் சேர்ந்த சீனு என்பவர் மீது சாத்தாங்காடு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் திருந்தி வாழ முடிவு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் போலீசில் பிணை பத்திரம் எழுதி கொடுத்து கடந்த 4 மாதங்களாக எந்த பிரச்சனைகளிலும் அவர் ஈடுபடாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று சீனு தனது வீட்டில் இருந்த நிலையில் அவரது நண்பர் லோகேஷ் மற்றும் கார்த்தி வந்து வேறு சில நண்பர்களுடன் பேச வேண்டியுள்ளது எனக்கூறி அவரை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அதன்பிறகு நீண்ட நேரமாகியும் சீனு வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சீனு ஆறு பேருடன் சென்றதாக குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து அவர்கள் சென்ற திசையில் குடும்பத்தினர் தொடர்ந்து தேடினர். இதில் திருவொற்றியூர் அண்ணாமலை நகர் ரயில்வே தடம் அருகே சீனு பிணமாக கிடந்தார்.
அவரது இரண்டு கால்களும் வெட்டப்பட்டு தனித்தனியே வீசப்பட்டு கிடந்தது. தகவலறிந்து சென்னை கொருக்குப்பேட்டை இருப்புப்பாதை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
அதில் விசாரணையில் அவரை கொலை செய்தவர்கள், கொலையை மறைக்க திட்டமிட்டது தெரியவந்தது. இதற்காக அவர் ரயிலில் அடிபட்டு இறந்ததாக போலீசாரை நம்ப வைக்கும் நோக்கத்தில் கால்களை தனியே வெட்டி வீசியதும் தெரியவந்தது.
அவரை யார் கொலை செய்தனர், எதற்காக கொலை செய்தனர் என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக அவரது நண்பர்களிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.