100 நாள் திட்டத்தில் வேலைசெய்யும் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வைத்த இளைஞர்!
இளைஞர் ஒருவர் 100 நாள் திட்டத்தில் வேலை செய்யும் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மார்பிங்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார்(27). இவர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி பொறுப்பாளராக உள்ளார். இவரது பணி, வேலைக்கு வரும் பணியாளர்களின் வருகையை உறுதி செய்யும் வகையில் அவர்களைப் புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.
அதனால் வேலைக்கு வரும் பெண்களை செல்போனில் படம்பிடித்துள்ளார். மேலும், அதனை ஆபாசமாக மார்பிங் செய்து செல்போனில் சேர்த்து வைத்துள்ளார். இவர் தனது மொபைலை சில நாட்களுக்கு முன் தினேஷிடம்(27) அடமானம் வைத்தார்.
ஆபாச புகைப்படம்
இந்நிலையில், அந்த தினேஷ் என்ற இளைஞர் அந்த செல்போனை எடுத்து பார்த்தார். அதில் அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்களின் படங்களை வசந்தகுமார் ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருந்தது. இது குறித்து வார்டு உறுப்பினர் ரவியிடம் தெரிவித்துள்ளார். இந்த தகவல் வீரசோழபுரம் கிராம மக்களிடையே பரவியது. இதை தொடர்ந்து தினேஷ் வீடு முன்பு கிராம மக்கள் திரண்டனர். வசந்தகுமார் கிராமத்திலிருந்து தப்பியோடினார்.
கிராம மக்கள் நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தப்பியோடிய வசந்தகுமாரை மூரார்பளையத்தில் போலீஸார் கைது செய்தனர். அனால் அவரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனக் கோரி கிராம மக்கள் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தினேஷையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் வார்டு உறுப்பினர் ரவியையும் போலீஸார் தேடி வருகின்றனர்.