மனைவியை உற்றுப் பார்த்ததால் ஆத்திரம் - மூவரை சுட்டு கணவன் வெறிச்செயல்!
மனைவியை உற்றுப் பார்த்ததாகக் கூறி அவரது கணவர், வாலிபர் மற்றும் பெற்றோரை சுட்டுக் கொன்றுள்ளார்.
குடும்பத் தகராறு
மத்திய பிரதேசம், தேவ்ரான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் படேல். இதே கிராமத்தில் வசித்து வரும் 32 வயதான மனக் அஹிர்வாருக்கும் ஜெகதீஷ் படேலுக்கும் குடும்பத் தகராறு இருந்துள்ளது. மனக், ஜெகதீஷ் மனைவியை அடிக்கடி உற்றுப்பார்த்து பின்தொடர்ந்து சீண்டி வருவதாக இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் கிராம மக்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும், ஆத்திரம் தீராத ஜெகதீஷ் படேல், மனக் வீட்டிற்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேரை அழைத்துச் சென்று சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், மனக், அவரது பெற்றோர், சகோதரர் ஆகியோர் மீது ஜெகதீஷ் மற்றும் கூட்டாளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
மூவர் சுட்டுக் கொலை
இதில் மனக் மற்றும் அவரது பெற்றோர் கமாந்தி மற்றும் ராஜ்பியாரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மனக்கின் சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அதனையடுத்து, ஜெகதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப் பதிவு செய்து. ஜெகதீஷை கைது செய்துள்ளனர். மீதமுள்ள நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி வலியுறுத்தியுள்ளனர்.