சுட்டுக்கொல்லப்பட்ட நபர்; 17 குழந்தைகளை சிறைபிடித்தது ஏன்? பரபர தகவல்!
17 குழந்தைகளை பிணைக் கைதியாக பிடித்து வைத்த நபரை போலீசார் என்கவுண்டர் செய்துள்ளனர்.
பிணைக் கைதி
மகாராஷ்டிரா, போவாய் பகுதியின் ஆர்.ஏ ஸ்டுடியோ கட்டிடத்தில் மர்மநபர் ஒருவர், குழந்தைகளை பிணை கைதியாக பிடித்து வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த நபர் குறித்து விசாரணை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட ஸ்டியோவில் வேலை பார்த்து வந்த ரோஹித் ஆர்யா என்ற நபர், விளம்பரப் படத்தில் நடிக்க வாய்ப்பளிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பை அறிந்த 17 குழந்தைகள் ஆடிஷனுக்காக ஸ்டியோவுக்குச் சென்றனர். அப்போது குழந்தைகள் அறைக்குள் நுழைந்ததும் அறையின் கதவை தாளிட்டு பிணைக் கைதியாக்கியுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து ரோஹித் ஆர்யாவை தொடர்பு கொண்டு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
என்ன காரணம்?
ஆனால் குழந்தைகளை விட மறுத்த ரோஹித், வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக, நான் ஒரு திட்டத்தை வகுத்து, சில குழந்தைகளை இங்கே பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறேன். எனக்கு எந்தக் கோரிக்கைகளும் இல்லை.

தார்மீக மற்றும் நெறிமுறை சார்ந்த கோரிக்கைகள் மட்டுமே உள்ளன. எனக்கு சில கேள்விகள் உள்ளன. நான் சிலரிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். நான் ஒரு பயங்கரவாதியும் இல்லை, எனக்கு பணம் சார்ந்த கோரிக்கைகளும் இல்லை. நான் ஒரு எளிய உரையாடலை மட்டுமே விரும்புகிறேன்.
அதனால்தான், இந்தக் குழந்தைகளை நான் பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளேன். ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக நான் அவர்களை அழைத்துச் சென்றுள்ளேன். நான் உண்மையிலேயே பரிமாற்றத்தை மேற்கொள்ளப் போகிறேன். இன்னும் நான் செய்வேன். நான் உயிருடன் இருந்தால், அதை நானே செய்வேன்; நான் இறந்தால், வேறு யாராவது அதைச் செய்வார்கள்.
ஆனால் அது நடக்கும். இதே குழந்தைகளுக்கு, அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாத வரை, அது நடக்கும்” என்று தெரிவித்திருந்தார். தொடர்ந்து பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போலீஸார், கட்டிடத்தின் பின்புறத்தின் வழியாக அறைக்குள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.
அப்போது, ரோஹித் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீஸை நோக்கி சுட முயன்றார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார், தற்காப்புக்காக ரோஹித்தை நோக்கி சுட்டு 17 குழந்தைகளையும் மீட்டனர். இதையடுத்து, சுடப்பட்ட ரோஹித் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    