ஓடிக்கொண்டிருந்த ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் - கடைசியில் நடந்த விபரீதம்
பெங்களூருவில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர் தடுமாறி கீழே விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவின் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்யும் அபிஷேக் என்ற 19 வயது இளைஞர் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி மதிய நேரத்தில் தனது 4 நண்பர்களுடன் சொந்த கிரமாத்துக்கு ரயிலில் சென்றார். அப்போது ஊர்த் திருவிழாவுக்காக தனது நண்பர்களுடன் பயணம் செய்த அவர், இருக்கையில் இருந்து எழுந்து சென்ற நிலையில் அவரை காணவில்லை என 4 நண்பர்களும் ஊர் திரும்பியவுடன் அபிஷேக்கின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து அபிஷேக்கின் பெற்றோர் தங்களின் மகனை காணவில்லை எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினருக்கு திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்தது.
அபிஷேக் படியில் நின்றபடி பயணம் செய்ததும், அப்போது அவர் செல்ஃபி எடுக்க முயன்று, தடுமாறி கீழே கால்வாய் ஒன்றில் விழுந்ததும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து உடலை தேடிக்கண்டறிந்து அபிஷேக்கின் பெற்றோரிடம் அதனை ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெங்களூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.