10 நிமிடத்தில் 1.5 லிட்டர் கோகோ கோலா குடித்த இளைஞர் பலி - பொதுமக்கள் அதிர்ச்சி
சீனாவில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடங்களில் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக பார்ட்டிகளில் மதுபானங்கள் அல்லது குளிர்பானங்களை வேகமாகக் குடிப்பவர்கள் அல்லது ஒரு சிப்பில் குடிப்பவர்கள் யார் என போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இது ரிஸ்க் ஆன விளையாட்டு என்றும் இதனால் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்தாலும் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.
அந்த வகையில் சீனாவில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், வெயிலின் தாக்கம் காரணமாக அருகிலுள்ள கடைக்குச் சென்று 1.5 லிட்டர் கோகோ கோலா பாட்டில் ஒன்றை வாங்கியுள்ளார். வெயில் சுட்டெரித்ததில் கடுமையான தாகத்தில் இருந்த அவர் வெறும் 10 நிமிடங்களில் அந்த ஒட்டுமொத்த கோகோ கோலாவையும் குடித்துள்ளார்.
அடுத்த 6 மணி நேரத்தில் அவருக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக அங்குள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மூச்சுத் திணறல், குறைந்த ரத்த அழுத்தம், அதிகமான இதயத்துடிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், அந்த இளைஞர் மிக வேகமாகச் சோடாவை குடித்ததால் அவரது குடலில் வாயு உருவாகியுள்ளது. அது அவரது ரத்தத்தில் கலந்து கல்லீரலையும் பாதித்துள்ளது. இதனால் அவரது கல்லீரலைப் பாதுகாக்கவும் உடலின் மற்ற பாகங்கள் மோசமாவதைத் தடுக்கவும் மருந்துகள் கொடுக்கப்பட்டது.
ஆனால் 12 மணி நேரத் தீவிர சிகிச்சைக்குப் பின்னரும் அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. அந்த இளைஞரின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.