போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் மர்ம மரணம் ... என்ன நடந்தது?
சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ராஜி என்பவர் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவரை மது போதைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்க, அவருடைய குடும்பத்தினர் சென்னை ராயப்பேட்டைப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர்.
ஏற்கனவே ராஜி இந்த போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ராயப்பேட்டையில் அமைந்துள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் ராஜி மே 2 ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட சிலமணி நேரத்திலேயே அவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவருடைய மனைவிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜியின் மனைவி தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்த போது முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. நல்ல உடல்நிலையில் இருந்த ராஜி திடீரென உயிரிழந்ததால் அவரது மனைவிக்கு மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் இந்த விவகாரம் குறித்து சென்னை அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் ராஜியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுதொடர்பாக தனியார் மறுவாழ்வு மையத்தின் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதன்பின் காவல் துணை ஆணையர் பகலவன் தலைமையிலான குழு மறுவாழ்வு மையத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு உடைந்த நிலையில் பிரம்பு கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்த ராஜியின் உடலிலும் பிரம்பால் அடித்த தடம் இருப்பதாகவும், வாயில் பல் அனைத்தும் உடைந்திருப்பதாகவும் அவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள மறுவாழ்வு மைய உரிமையாளர் கார்த்திகேயனை போலீசார் தேடி வருகின்றனர்.