பணத்தை எடுக்க பெட்டிக்குள் கைவிட்ட கூலித்தொழிலாளி - கடைசியில் நடந்த சோகம்
தூத்துக்குடியில் பணத்தை எடுக்க பெட்டிக்குள் கைவிட்ட போது நல்லபாம்பு கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியில் வசித்து வரும் நடராஜன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இவர் நேற்று குலசேகரன்பட்டினம் சாலையில் உள்ள ஹாலோபிளாக் கம்பெனியில் தனது நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள பெட்டிக்குள் கைவிட்டு பணம் எடுக்க முயன்ற போது பெட்டிக்குள் இருந்த நல்ல பாம்பு நடராஜரின் வலது கையில் தீண்டியுள்ளது.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அந்த பாம்பை அடித்துள்ளனர். பின்னர் பாம்புடன் நடராஜனை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.