படுத்த படுக்கையாக ஆம்புலன்சில் வந்து மனு அளித்த தொழிலாளி - கண்கலங்கும் வீடியோ
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் ஆம்புலன்சில் வந்து தனது பங்கை பெற்றுத்தரக் கோரி கட்டிடத் தொழிலாளி மனு கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அந்தியூர் சங்கராபாளையத்தை சேர்ந்த தொழிலாளி நடராஜன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்களுடன் ஆம்புலன்சில் வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில் நான் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்துள்ளேன். நடந்து சென்றபோது தவறிக் கீழே விழுந்து முதுகு தண்டுவடம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு படுத்த படுக்கையாக உள்ளேன்.
எனது குடும்பத்துக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் எனக்கு இன்னும் ஒரு ஏக்கர் நிலம் வரவேண்டிய பாக்கி உள்ளது. இதனை எனது அண்ணன் தர மறுத்து வருகிறார். தற்போது என் மனைவியும் மகனும் என்னுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.
நான் எனது தாயார் பராமரிப்பில் இருந்து வருகிறேன் எனக்கு உரிய பங்கை வாங்கி தர நடவடிக்கை எடுக்கவும், என்னை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்க்கவும் அரசு சார்பில் உதவித்தொகை வழங்க வேண்டும் எனக் கூறி மனுவில் தெரிவித்துள்ளார்.
முடியாத நிலையிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வந்து மனு அளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.