வழுக்கை தலையில் விக்.. இளம்பெண்களை ஏமாற்றிய பலே ஆசாமி கைது
ஆந்திராவில் நூதனமான முறையில் இளம்பெண்களை ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் துணி மண்டலம் ஹம்சவரம் கிராமத்தை சேர்ந்த சேக் முகமது ரபி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘கார்த்திக் வர்மா’ என்ற போலி பெயரில் கணக்கு தொடங்கி, தனது தொடர்பில் இருந்து வந்த இளம் பெண்களிடம் தான் வெளிநாட்டில் வேலை செய்து திரும்பிவந்த என்ஆர்ஐ என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
மேலும் அவருக்கு வழுக்கை தலை இருந்த நிலையில் அதற்கு விக் வைத்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார். இதன்மூலம் தன்னிடம் நெருங்கிய இளம் பெண்களை குறிவைத்து அவர்களில் பொருளாதார ரீதியாக வசதியானவர்களை தன்னுடைய வலையில் வீழ்த்தி உல்லாசமாக இருந்ததுடன் அவர்களிடமிருந்து பணம், நகைகள் ஆகியவற்றை கேட்டு வாங்கி வசதியாக வாழ்ந்து வந்துள்ளார்.
. இந்த நிலையில் ஹைதராபாதில் உள்ள கே.பி.எஸ்.சி காலனியை சேர்ந்த பெண் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் தனக்கு கார்த்திக் வர்மா என்ற பெயரில் அறிமுகமாகிய நபர் நட்பாக பழகி 18 சவரன் தங்க ஆபரணங்கள், 70 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டார் என்று எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த எஸ்.ஆர்.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு அவர் சேக் முகமது ரஃபி என்று கண்டுபிடித்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. சேக் முகமது ரபி இதற்கு முன்னர் ஆந்திராவின் பல்வேறு ஊர்களில் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 4 பெண்களிடம் இதே போன்ற மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.