130 கி.மீ சைக்கிள் பயணம்; ஹேண்டில் பாரை தொடவே இல்லையே..! - புதிய கின்னஸ் சாதனை!
இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் 130 கி.மீ தூரம் வரை சைக்கிள் ஓட்டி நபர் ஒருவர் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை
கனடாவைச் சேர்ந்த ராபர்ட் முரே என்பவர் சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர். இவர் இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் சைக்கிள் ஓட்டும் கலையை பல வருடங்களாக முயற்சித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராபர்ட் முரே தனது இரண்டு கைகளையும் பயன்படுத்தாமல் 130 கி.மீ தூரம் வரை சைக்கிள் ஓட்டி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை 5 மணி நேரம் 37 நிமிடங்களில் அவர் முடித்துள்ளார். தனது 15 வயதில் வாங்கிய முதல் சைக்கிளில் தான் இந்த கின்னஸ் சாதனையையும் ராபர்ட் நிகழ்த்தியிருக்கிறார்.
இதற்காக பல மாதங்கள் இடைவிடாத பயிற்சியையும் அவர் மேற்கொண்டுள்ளார். சாதனை பயணத்தின்போது சுமார் 122 கி.மீ தூரம் வரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சிறப்பாக சென்று கொண்டிருந்தபோது அவருக்கு களைப்பு அதிகமானது.
மகிழ்ச்சி தருணம்
ஆனாலும் தனது மனவலிமையால் 130 கி.மீ தூரம் வரை சென்ற பின்னர்தான் ஹேண்டில் பாரை பிடித்தார் ராபர்ட். இந்த பயணத்தின் கடைசி கட்டத்தில் சைக்கிளின் கியர் ரிப்பேர் ஆனது போன்ற பல தடைகளைச் சந்தித்துள்ளார்.
இருந்தும் மனம் தளராமல் சைக்கிளை ஒட்டி அவர் சாதித்து காட்டியுள்ளார். மேலும், இதை வெறும் தனிப்பட்ட சாதனைக்காக மட்டும் செய்யாமல் அல்சைமர் நோய்க்கு நிதி திரட்டும் முயற்சிக்காக ராபர்ட் செய்துள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த சாதனை குறித்து ராபர்ட் கூறியதாவது "என் குடும்பத்தில் உள்ள சிலர் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். என்னுடைய பாட்டி இந்நோயினால் தான் இறந்தார். கின்னஸ் சாதனை படைத்ததோடு எனக்கு நெருக்கமானவர்களுக்கு தேவையான பணத்தை திரட்ட முடிந்ததால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார் .