லிப்ட் கேட்டு வந்தவர் பணம் தராததால் அடித்துக் கொலை: சென்னையில் கொடூரம்
கடந்த ஏப்ரல் 4-ம் தேதி அன்று அதிகாலை சென்னை கொளத்தூ 45 வயதான நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரழந்திருப்பதை அறிந்த போலிஸார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் இறந்துபோன நபர் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சங்கர் (47) என்பதும் கொளத்தூரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நள்ளிரவு வந்ததும் தெரியவந்தது. சங்கர் உயிரிழந்து கிடந்த இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீஸார் ஆய்வு செய்தனர்.
ஏப்.04 அன்று அதிகாலையில் சங்கர் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்துள்ளது பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரும் சங்கரும் இறங்கி பேசுவதும், வாக்குவாதம் நடப்பதும் பதிவாகியிருந்தது.

இதனால் ஏற்பட்ட கைகலப்பில் வண்டியை ஓட்டி வந்தவர் சங்கரை கீழே தள்ளிவிட்டு பலமாக தாக்கியுள்ளது பதிவாகியுள்ளது’ மோட்டார் பைக்கை ஓட்டி வந்த நபர் தாக்கியதில் மயக்கமாகி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. போலீஸார் அந்தப் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் அது கொளத்தூர் அன்னை சத்யா நகர், பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், “கடந்த 4-ம் தேதி மது அருந்தி விட்டு நள்ளிரவு 2-30 மணி அளவில் தனது இரு சக்கர வாகனத்தில் ரெட்டேரி வழியாக சென்று கொண்டிருந்தபோது, அங்கு நின்றிருந்த சங்கர் லிப்ட் கேட்டுள்ளார். அவரை அழைத்துக் கொண்டு சம்பவ இடமான வளர்மதி நகருக்கு வந்த நிலையில் 'பெட்ரோல் போட பணம் வேண்டும் 100 ரூபாய் கொடு' என தான் கேட்டதாகவும், அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தான் ஆத்திரப்பட்டு அவரை தாக்கியுள்ளார்.
தான் தாக்கியதில் கீழே விழுந்து சங்கர் மயக்கமாகிவிட்டார், எழுப்பி பார்த்து எழுந்திருக்காததால் அவர் பாக்கெட்டிலிருந்து ரூ.1000-ஐ எடுத்துக்கொண்டு தான் போய் விட்டதாகவும், மயக்கமாக கிடப்பார் அப்புறம் எழுந்து போயிருப்பார் என்றுதான் நினைத்ததாகவும் சசிகுமார் கூறியுள்ளார்.
கீழே விழுந்த சங்கர் பின் தலையில் காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதால் சசிகுமாரை போலீஸார் கொலை வழக்கில் கைது செய்தனர்.