தகராறில் ஈடுபட்ட மனைவி - லிஃப்ட் குழாய் வழியாக தள்ளிவிட்ட கணவர்
புனேவில் தகராறில் ஈடுபட்ட மனைவியை கட்டிடத்தின் 4வது மாடியில் இருந்த லிப்ட் குழாய் வழியாக கணவர் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனேவின் கோந்த்வா புத்குக் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கக்தே வஸ்தி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்டராக நிதின் என்பவர் தனது மனைவியுடன் அங்கு வசித்து வேலை பார்த்து வந்தார். கணவன் - மனைவி இருவருக்கும் இடையே ஏற்கனவே குடும்ப விஷயமாக தகராறு இருந்து வந்துள்ளது.
இதனிடையே கடந்த ஜனவரி 22 ஆம் தேதி இரவு இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை எழுந்தது. இதன் காரணமாக இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நான்காவது மாடியில் இருந்து மனைவியை லிஃப்ட் குழாய் வழியாக தள்ளிவிட்டிருக்கிறார்.
4வது மாடியில் இருந்து விழுந்தவர் மண் குவியல் மீது வந்து விழுந்து அடிபட்டதில் அவருடைய முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு அருகாமையில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த சம்பவம் குறித்து கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு நிதின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.