பெண்கள் தொழுகை நடத்திய மசூதிக்குள் புகுந்த இளைஞர் செய்த மோசமான செயல்
கர்நாடகாவில் பெண்கள் தொழுகை நடத்திய மசூதிக்குள் புகுந்த இளைஞர் செய்த மோசமான செயலால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாக மதம் ரீதியான சர்ச்சை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடக்கமாக பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உடுப்பியில் உள்ள ஹொஸா மார்குடி கோவிலில் நடக்கும் விழாவில் இஸ்லாமியர்கள் கடை போட தடை விதிக்கப்பட்டது.
அதேபோல் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் லவுட் ஸ்பீக்கர் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டும், இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று கடுமையாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதமான இம்மாதத்தில் அவர்கள் நோன்பிருந்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் மங்களூரில் தொக்கோட்டு கிராமத்தில் உள்ள ஹூடா ஜும்மா மசூதியில் தவறாக நடந்து கொண்டதற்காக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அங்குள்ள பெண்கள் தொழுகை அறைக்குள் புகுந்து சுஜித் ஷெட்டி என்ற இளைஞர் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
விசாரணையில் கர்கலா பகுதியை சேர்ந்த சுஜித் மசூதிக்குள் நுழைத்து தன்னுடைய ஆடையை கழற்றி தவறான சைகைகளை செய்ததாக கூறப்படுகிறது.மேலும் அங்கு இருந்த பெண்கள் சிலரிடம் அவர் தவறாக நடக்க முயன்றதாகவும், மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் உள்ளேயே இருந்த பெண்கள் சிலர் உடனே தங்கள் வீட்டு ஆண்களுக்கு போன் செய்து அழைத்த நிலையில் அவர்கள் வந்து அந்த இளைஞரை பிடித்து இழுத்து வெளியே அழைத்து சென்றனர்.
மசூதியில் தொழுகைக்கு சென்ற பாத்திமா, பாயிஸா, ஆசியா உள்ளிட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் சுஜித் கைது செய்யப்பட்டார்.