கொலையில் முடிந்த தகாத உறவு - போதையில் இளைஞர் செய்த கொடூர சம்பவம்
செய்யாறு அருகே 4 வயது சிறுவனை கொலை செய்யப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் போலீஸ் விசாரணையில் வெளியாகியுள்ளது.
கடலூர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த காரணத்தால் அவரது மனைவி நர்மதா (வயது 26) தனது நித்திஷ் (6), சித்தார்த்தா (4) என்ற இரு மகன்களுடன் தனியாக வசித்து வந்தார்.
இதனிடையே பண்ருட்டியை சேர்ந்த தனியார் வங்கி ஒன்றில் நிதி வசூல் செய்யும் வேலை செய்துவரும் வினோத் குமாருக்கும், நர்மதாவிற்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து செய்யாறு சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தனியார் ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்த நர்மதா அருகில் உள்ள ஆக்கூர் கிராமத்தில் வினோத் குமார் மற்றும் தனது இரு மகன்களுடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் வினோத்குமாருக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்ததால் நர்மதாவுடன் அடிக்கடி சண்டையில் ஈடுபட்டு வந்ததாகவும், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி பணிக்குச் சென்று நர்மதா மாலை வீடு திரும்பியபோது தனது மகன் சித்தார்த்தா இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தாகவும் தூசி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சித்தார்த்தாவை அருகில் உள்ள மாமண்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் சித்தார்த்தாவின் கால்களைப் பிடித்து வினோத் குமார் சுவரில் அடித்ததால் மரணமடைந்ததாக தெரிய வந்தது. இதனால் வினோத் குமாரை போலீசார் கைது செய்தனர்.